Tuesday, August 15, 2006

"கண்ணன் பிறந்தான்!"

"கண்ணன் பிறந்தான்!"


வெண்ணை உண்ட கண்ணன் அன்று

அன்னை அவளிடம் "இல்லை" என்றான்

"உன்னை நம்பி ஊழியம் இல்லை!

என்னை ஏய்க்கும் திறனும் வேண்டா!

எங்கே உந்தன் வாயைக் கொஞ்சம்

நன்கே சற்று விரித்துக் காட்டென"

அன்னையவளும் அதட்டும் வேளையில்,

"இன்னே பிறவும் உலகம் காண் பார்!" என

கண்ணன் அவனும் அகல விரித்தான்!

அன்னே! அங்கே அத்தனை உலகும் தெரிந்ததம்மா!

என்னே! இவன் புகழ்! என்னே! இவன் புகழெனவே

அன்னையும் மகிழ்ந்து போற்றி வணங்கினாள்!

பின்னே அவன் பெயர் சொல்லியே நாமும்

மன்னுபிறவியும் தொலைத்திடுவோமே!

கண்ணன் அவன் புகழ் சொல்லவும் போமோ!

கண்ணன் என்றும் நம்மைக் காப்பான்!


கோவிக்காத கண்ணன் பிறந்தான்!

கோவிக்காமல் என்றும் இருப்பான்!

கீதையோடு சேர்ந்து மகிழ்வான்!

கீதம் நமக்கு இசைத்து வைப்பான்!

கோடிக்கோடி வந்தனம் செய்வோம்!

ஆடிப்பாடி இன்று மகிழ்வோம்!

கண்ணன் அவன் புகழ் சொல்லவும் போமோ!

கண்ணன் என்றும் நம்மைக் காப்பான்!


[பெற்றெடுத்த துளசி தளத்துக்கு நன்றி!]

20 பின்னூட்டங்கள்:

துளசி கோபால் Wednesday, August 16, 2006 12:13:00 AM  

//பெற்றெடுத்த துளசி தளத்துக்கு நன்றி!//

துளசியும் ஒரு யசோதைதான்.

VSK Wednesday, August 16, 2006 12:19:00 AM  

பெறவில்லை! வளர்த்தவள்தான் என்கிறீர்கள்!

ஒப்புக் கொள்கிறேன், அங்கு!

ஆனால்,....எனக்குப் பெற்றெடுத்த தாயே,
......துளசி தளம்!
:)

Unknown Wednesday, August 16, 2006 12:20:00 AM  

கிருஷ்ணா,முகுந்தா,முராரே
ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே

கருணாசாகர,கமலா நாயக
கருணாசாகர,கமலா நாயக
கனகாம்பரதாரி கோபாலா

(கிருஷ்ணா..)

காளிய நர்த்தன,கம்சநிர்தூஷன
காளிய நர்த்தன,கம்ச நிர்தூஷன
குவலயதள நீலா,கோபாலா

(கிருஷ்ணா..)

குடில குந்தளம்
குவலய தளநீலம்
கோடிவதன லாவண்யம்
கோபி புண்யம் பஜானம்
கோபாலம்

கோபி ஜன மனமோகன வியாபக
கோபி ஜன மனமோகன வியாபக
குவலய தல நீலா,,கோபாலா..

(கிருஷ்ணா..)

(என் உள்ளம் கவர்ந்த தியாகராஜ பாகவதர் பாடல்)

கோவி.கண்ணன் Wednesday, August 16, 2006 12:29:00 AM  
This comment has been removed by a blog administrator.
துளசி கோபால் Wednesday, August 16, 2006 12:30:00 AM  

செல்வன்,

எனக்கும் பிடித்த பாட்டுதான் இது. ஹரிதாஸ் படம் இந்த முறைதான் வாங்கிவந்தேன். பார்த்துவிட்டு விமரிசனம்கூட எழுதி வைத்திருக்கிறேன். ஒருநாள் பதிவிடணும்.

ஜயராமன் Wednesday, August 16, 2006 12:43:00 AM  

குழலூதும் கண்ணனுக்கு SK வின் அழகான குறுங்கவிதையா?

நன்றாக இருக்கிறது.

//கீதையோடு சேர்ந்து மகிழ்வான்!

கீதம் நமக்கு இசைத்து வைப்பான்!

///

கீதத்தோடு சேர்ந்து மகிழ்வான்;
கீதையோடு இசைத்து வைப்பான்:

என்று படித்துப்பார்த்தேன். இன்னும் இனித்தது.

அவன் வழிகாட்டிய கீதை நம்மை வழிகாட்டும் பாதை.

தங்கள் உன்னத பதிவுக்கு நன்றி

துபாய் ராஜா Wednesday, August 16, 2006 12:58:00 AM  

அன்பு SK,நல்ல பதிவு.ஆத்திகப்பதிவுகள்
தொடரட்டும்.வாழ்த்துக்கள்.

துளசி அம்மா,செல்வன்,கோவி.கண்ணன்
ஆகியோரது பின்னூட்டங்களும் அருமை.

உங்கள் நண்பன்(சரா) Wednesday, August 16, 2006 4:20:00 AM  

அண்பர் திரு.SK அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும்மற்றும் வலை உலக நண்பர்கள் அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்.

அன்புடன்...
சரவணன்.

போன வருடம் கிருஷ்ண ஜெயந்தியின் போது அத்தைபொண்ணுக என் மேலயும் நான் அவர்களின் மேலும் மஞ்சள் தண்ணி ஊற்றியது தான் நினைவுக்கு வருது!
ஹிம்ம்... இந்த ஆண்டு லீவு கிடைக்கலை !:((((((

அன்புடன்...
சரவணன்.

கோவி.கண்ணன் [GK] Wednesday, August 16, 2006 12:15:00 PM  

போற்றல் மட்டுமே போகட்டும் கண்ணனுக்கு !
தூற்றுதல் அரியாதவரின் போற்றல் அது !

வாய்த் திறந்து உலகைக் காட்ட இன்று
வாய்த் திருக்கவில்லை கண்ணனுக்கு,
காலத்தை திறந்து காட்டுகிறான், அதில்
ஞாலத்தைப் போற்றி எழுதுகிறான் !

மண்ணும் விண்ணும் மறந்துவிட்டால்
கண்ணன் மட்டும் தான் காட்டுகிறானா ?
சரவணன் போற்றும் சங்கரன் வடிக்கும் திருப்புகழ்
ஈட்டிடுமே, காட்டிடுமே அதை !

கோவிப்பதலும் உண்டு கொள்ளை இன்பம்,
கோவம் இருக்குமிடத்தில் குணமும் இருக்கும்
மேவும் நட்பைப் போற்றியே கோவி(ந்தனும்) இருப்பான் !
நாவும் இனிக்க நயமாக நாளும் பேசுவான் !

கீதையை கீதமாக இன்னிசைத்து
கண்ணன் ஆடுகிறான் ஆட்டம் அங்கே !
அது ஆதிசேஷனின் மீது அவன் நின்று
ஆடுவதற்கு ஒப்பான மகிழ்வாட்டம் !

பலராமர்கள் பக்கத்தில் துணையிருக்க,
பலத்தில் கண்ணனுக்கு என்ன குறை !
போற்றல் மட்டுமே போகட்டும் கண்ணனுக்கு !
தூற்றுதல் அரியாதவரின் போற்றல் அது !


கண்ணன் பெயரில் கவிதை கடைந்த
எஸ்கே வாழ்க ! திருப்புகழ் போல் என்றும் !

அன்புடன் கோவி.கண்ணன்

VSK Wednesday, August 16, 2006 1:19:00 PM  

மிக அருமையான பாகவதர் படல், செல்வன்!
ஜி.ராமனாதன் இசையில், அற்புதமாக வந்திருக்கும்!
நல்ல நாளில், இதையும் சேர்த்ததற்கு நன்றி.

VSK Wednesday, August 16, 2006 1:20:00 PM  

சீக்கிரம் போடுங்க, துளசி. கோபால்!

உங்க விமரிசனம் எல்லமே ஒரு தனி அழகா இருக்கும்!

VSK Wednesday, August 16, 2006 1:25:00 PM  

கீதை படிக்கும் போது, அதன்படி நடக்க நாம் முயற்சிக்கும் போது, நமக்கு அதை அருளிய கண்ணனும் மகிழ்வான் என்றும்,

கோபியரை மயக்க இசைத்த கீதம், நமக்கும் இன்பம் அளிக்கும் என்பதைச் சொல்ல வந்தேன், திரு. ஜயராமன்!

நீங்கள் சொல்வதும் அழகாகவே இருக்கிறது.

திரு. ம்யூஸைப் பார்த்தால் நான் 'கண்டிப்பாக'[!] வரச் சொன்னதாகச் சொல்லவும்!!

:))

VSK Wednesday, August 16, 2006 1:27:00 PM  

அடிக்கடி வராத [கல்யாண மும்முரம்??!!] உங்களையும் வரவழைத்த கண்ணனுக்கு நன்றி!

உங்களுக்கும்தான், திரு. [துபாய்]ராஜா!!!

VSK Wednesday, August 16, 2006 1:31:00 PM  

வாழ்த்துகளுக்கு நன்றி, திரு.சரவணன்!

அதெப்படீங்க, சும்மா ஒரு வார்த்தை , அந்த 'மஞ்சள் தண்ணி ஊத்தியது' என்று போட்டு, கண்ணன் நாளில் உறியடிக்கும் அந்த நிகழ்வை அப்படியே கண்முன் கொண்டு வர முடிகிறது உங்களால்!?

மிகவும் அருமை!!

திறமைக்குத் தலை வணங்குகிறேன்!

VSK Wednesday, August 16, 2006 1:34:00 PM  

பதில் கவிதை எழுதுவது உங்களுக்குக் கை வந்த கலையாயிற்றே, கோவியாரே!
கேட்கவா வேண்டும்!

வெண்ணை போல உருகியது என்மனம்!
வண்ணக் கவிதையைக் கண்டு!
எண்ணக்குவியல் அபாரம்!
கண்ணன் புகழ்பாடும் இந்நாளில்!

உங்கள் நண்பன்(சரா) Thursday, August 17, 2006 3:04:00 AM  

//அதெப்படீங்க, சும்மா ஒரு வார்த்தை , அந்த 'மஞ்சள் தண்ணி ஊத்தியது' என்று போட்டு, கண்ணன் நாளில் உறியடிக்கும் அந்த நிகழ்வை அப்படியே கண்முன் கொண்டு வர முடிகிறது உங்களால்!?//

நன்றி அண்பர் திரு.SK அவர்களே,
எனது கிராமத்தைப் பற்றி ஒரு பதிவிட்டிருக்கின்றேன்,நிச்சயம் அது உங்களுக்கு ஒரு கிராமத்தை கண்முன் கொண்டுவரும் என்று நினைக்கின்றேன்!
அதற்க்கான சுட்டி இதோ!
http://unkalnanban.blogspot.com/2006/08/blog-post_115570806362340979.html

அன்புடன்...
சரவணன்.

குமரன் (Kumaran) Friday, August 18, 2006 7:08:00 AM  

வண்ண மாடங்கள் சூழ்திருக் கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிட
கண்ணன் முற்றம் கலந்து அளறா யிற்றே.

ஓடுவார் விழுவார் உகந்தா லிப்பார்
நாடுவார் நம்பிரான் எங்குற்றா னென்பார்
பாடுவார்களும் பல்பறைகொட்ட நின்று
ஆடுவார்களும் ஆயிற்றாய்ப் பாடியே.

பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில்
காணத்தாம் புகுவார் புக்குப போதுவார
ஆணொப்பார் இவன்நேரில்லை காண் திரு
வோணத்தான் உலகாளு மென்பார்களே.

உறியை முற்றத்து உருட்டி நின்றாடுவார்
நறுநெய் பால்தயிர் நன்றாகத் தூவுவார்
செறிமென் கூந்தல் அவிழத்திளைது எங்கும்
அறிவழிந்தனர் ஆய்ப்பாடி யாயரே.

கொண்ட தாளுறிக் கோலக் கொடுமழு
தண்டினர் பறியோலைச்சயனத்தர்
விண்டமுல்லை அரும்பன்னபல்லினர்
அண்டர்மிண்டிப் புகுந்துநெய்யாடினார்.

கையும் காலும் நிமிர்த்துக் கடாரநீர்
பைய வாட்டிப் பசுஞ்சிறு மஞ்சளால்
ஐயநா வழித்தாளுக்கு அங்காந்திட
வையமேழும் கண்டாள் பிள்ளை வாயுளே.

வாயுள் வையகங் கண்ட மடநல்லார்
ஆயர் புத்திரன் அல்லன் அருந்தெய்வம்
பாய சீருடைப் பண்புடைப் பாலகன்
மாயன் என்று மகிழ்ந்தனர் மாதரே.


பத்து நாளும் கடந்த இரண்டாநாள்
எத்திசையும் செயமரம் கோடித்து
மத்த மாமலை தாங்கிய மைந்தனை
உத்தானஞ் செய்து உகந்தனர் ஆயரே.

கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை யிறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கி லாமையால் நான்மெலிந் தேன்நங்காய்.

செந்நெலார் வயல்சூழ் திருக்கோட்டியூர்
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை
மின்னு நூல்விட்டுச் சித்தன் விரித்த இப்
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே.

VSK Friday, August 18, 2006 11:02:00 AM  
This comment has been removed by a blog administrator.
VSK Friday, August 18, 2006 11:02:00 AM  

பாவம் போக்கும் பத்துப் பதிகம் தந்ததற்கு நன்றி, குமரன்!

இப்பதிவின் மூலம் சில நல்ல பாடல்கள் கிடைத்தன!

மகிழ்வாய் இருக்கிறது!

KABEER ANBAN Friday, August 30, 2013 10:34:00 AM  

தங்கள் கண்ணனின் கவிதையை வலைச்சரத்தில் இணைக்கும் பேறு கிடைத்தது. உடனே சொல்லமுடியாமல் போனதற்கு வருந்துகிறேன். ஜன்மாஷ்டமி வாழ்த்துகள்.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP